இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா புதிய வெப் சீரிஸின் மூலமாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் எஸ்ஜே சூர்யா தமிழின் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஒருவர். இயக்கம், எழுத்தும் நடிப்பு, இசை என எல்லாத் துறைகளிலும் திறமை கொண்டவர். ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தார். பின்னர் பல படங்களை இயக்கினார் எஸ்ஜே சூர்யா. அதையடுத்து நடிகராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
‘மெர்சல்’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்திலும் எஸ்ஜே சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் புதிய வெப் சீரீஸ் மூலமாக அவர் ஓடிடி-யில் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ படத்தின் இயக்குனர் ஆன்ட்ரூ லூயிஸ் இந்த வெப் சீரிஸை இயக்க இருப்பதாகவும் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஒரிஜினலாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.