ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டிகளிற்கு சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் அணிகள் முன்னேறியுள்ளன.
16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து விட்டன. இதனையடுத்து, ருமேனியா புகாரெஸ்டில் நடைபெற்ற நொக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 90 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல் எடுத்து சமநிலையை அடைந்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது.
அதில் இரு அணிகளும் கோல் ஏதுவும் எடுக்காத நிலையில், பின்னர் இரு அணிகளுக்கும் பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், சுவிட்சர்லாந்து அணி 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இதைப்போல டென்மார்க் கோபன்ஹேகனில் நடைபெற்ற நொக் அவுட் சுற்றில் குரோஷியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் ஸ்பெயின் அணி 5 க்கு 3 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.