உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்து ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதையொட்டி, அயோத்தி நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இதன் காரணமாக அயோத்தியில் பல வெளிநாடுகள் தங்களது மக்களுக்காகத் தங்கும் விடுதிகளை கட்ட உள்ளன. அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்களும் அயோத்தி செல்லும் தம் பொதுமக்களுக்காக தங்கும் விடுதிகளை கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இதை வரவேற்கும் வகையில் பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில அரசும் அவர்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கத் துவங்கி உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை, நேபாளம், கென்யா, பிஜி, கனடா, இந்தோனேஷியா, மலேஷியா, மொரிஷீயஸ், தாய்லாந்து மற்றும் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில், பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நிலம் கேட்டு மனு கொடுத்துள்ளன. இத்துடன் ஆந்திராவின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை, காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மடம், ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் சிலரும் அயோத்தியில் இடம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் சார்பிலும் அயோத்தியில் நிலம் வாங்கி பொதுமக்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், நாட்டிலுள்ள புண்ணியதலங்களில் உபியின் அயோத்தியும் இந்துக்களுக்கு இடையே முக்கியமாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இது முடிவிற்கு வந்த நிலையில் அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சர்வதேச அளவில் புகழ் கொண்டதாகக் கட்டப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்று வர விரும்பும் சூழல் ஏற்படும்.
அப்போது அயோத்தியில் அரசு சார்பில் சுமார் ஆயிரம் பேருக்கானத் தங்கும் விடுதி மலிவு கட்டணத்தில் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதன்மூலம் ஏழைகளும் பலன் பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது. இந்த அரசு விடுதி இல்லை என்றால் அயோத்தி வரும் தமிழர்கள் வேறு இடங்களில் அதிக செலவிட்டு தங்கி சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அயோத்தி நகர முனிசிபல் ஆணையரான விஷால்சிங் கூறும்போது, ‘ராமர் கோயிலால் சர்வதேச தெய்வீக் சுற்றுலாத் தலமாக அயோத்தி மாறும். இங்கு மற்ற மாநிலத்தினரும், வெளிநாட்டவரும்பயனடைய உபி அரசு சார்பில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஒரு அறிவிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பலரும் செய்த மனு பரிசீலிக்கப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முக்கிய தெய்வீக நகரங்களில் ஒன்றான காசி எனும் வாரணாசிக்கு அன்றாடம் தமிழர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த குமாரசாமி மடம் மற்றும் நாட்டு கோட்டை நகரத்தார் மடத்திலும் குறைந்த செலவில் தங்கி பயனடைகின்றனர். இதுபோல், அயோத்தியில் அரசே முன்வந்து தங்கும் விடுதியை கட்டினால் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.