ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆனி மாதத்தில் பவுர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாக இந்த ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி கருதப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.
ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். மாலையில் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு மாலை அணிவித்து நைவேத்தியம் செய்து படைத்து விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இரவு வானில் பிறையை பார்த்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது போன்ற முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றி உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும். ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.