26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு; பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை!

இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தடுப்பூசியை அதிக விலைக்கு வாங்கியதாகவும், ஒப்பந்த சரத்துகளில் குளறுபடி உள்ளது மற்றும் தடுப்பூசிக்காக கைமாறிய பணம் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக பாராளுமன்ற குழு விசாரணையும் சேர்ந்துகொண்டதால், அதிபர் போல்சனாரோ-வுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ரூ. 2450 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், முதல்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பிவைக்க ரூ. 335 கோடி முன்பணமாக அனுப்பிவைக்க ரசீது அனுப்பியிருந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மேடிசன் பையோடெக் என்ற நிறுவனத்தின் பெயரில் இந்த ரசீது இருந்ததன் காரணத்தால், பிரேசில் அரசு பாரத் பையோடெக் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஒரு நிறுவனத்தின் பெயரில் முன்பணம் அனுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்த இறக்குமதி துறை தலைமை அதிகாரியான ரிக்கார்டோ மிராண்டா இதுகுறித்து அதிபர் போல்சனாரோ-வை சந்தித்து புகாரளித்தார்.

இந்த முறைகேட்டில் நாடாளுமன்ற ஆளும் தரப்பு தலைவரான ரிக்கார்டோ பர்ரோஸ்-க்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுப்பிய போல்சனாரோ இதுகுறித்து காவல்துறையினரிடம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதாக ரிக்கார்டோ மிராண்டா-விடம் உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து எந்தவித விசாரணையும் நடத்தாமல், பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் முனைப்பு காட்டிய அதிபரின் செயலை கண்டித்து, நாடாளுமன்ற உறுப்பினரான தனது சகோதரர் லுயிஸ் மிராண்டா உதவியுடன் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் ரிக்கார்டோ மிராண்டா.

மிராண்டா சகோதரர்களின் புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்ற குழுவின் முன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆஜரான இவர்கள், மேடிசன் பையோடெக் நிறுவனம் அனுப்பிய ரசீது மற்றும் அதிபரை சந்தித்து புகாரளித்ததற்கான ஆதாரம் உள்ளிட்டவைகளை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

மேலும், இந்திய நிறுவனத்திடம் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்திருக்கும் பிரேசில் அரசு பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து வரிஏய்ப்பு செய்வதற்காக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத நிறுவனத்தின் பெயரில் பணப்பரிமாற்றம் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.

எட்டு மணிநேரம் நடந்த இந்த விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ள நிலையில், அதிபர் போல்சனாரோ கோவாக்சின் தடுப்பூசி சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதே விலைக்கு தான் பிரேசில் அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், மேடிசன் பையோடெக் விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலில் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்நாட்டு மக்கள் அதிபர் மீது அதிருப்தியில் உள்ளனர், கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், முறைகேடு விவகாரம் நாடாளுமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து இந்த வார இறுதியில் மற்றொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

அதிபருக்கு எதிராக 50 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக 23 சதவீதம் பேர் தான் உள்ளனர், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிபர் தேர்தல் நடக்கும் பட்சத்தில் போல்சனாரோ முதல் ரவுண்டிலேயே நாக் அவுட் ஆகிவிடுவார் என்று அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மேடிசன் பையோடெக் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தனது இணையத்தளம் வாயிலாக வெளியிட்டிருக்கும் பாரத் பையோடெக் நிறுவனம் சர்வதேச மருந்து விற்பனைக்கான முகமையாக தங்கள் இணை நிறுவனமான மேடிசன் பையோடெக் செயல்பட்டு வருவதாகவும், மற்ற நாடுகளுக்கு என்ன விலைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதோ அதே விலைக்கு தான் பிரேசில் அரசுடனும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறது. பாரத் பையோடெக் மற்றும் மேடிசன் பையோடெக் ஆகிய இவ்விரு நிறுவனங்களின் இயக்குனராக கிருஷ்ணா எல்லா உள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment