தமிழில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம், தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.
அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி வேடத்தில் அமலா பால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.
இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று தான் தயாரிப்பாளர் சுரேஷ் காத்திருந்தாராம். ஆனால், கொரோனா மூன்றாவது அலையும் வரும் என சொல்லப்பட்டு வருவதால், திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகத்தால் ஓடிடியில் வெளியிட அவர் முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.