ஜப்பானில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில், “ ஜப்பானில் கொரோனா நான்காம் அலை காரணமாக மே மாதத்தில் கொரோனா அதிகரித்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஜப்பான் அரசு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜப்பானில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குவதைத் தொடர்ந்து ஜப்பானில் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வருவதற்கு ஜப்பான் நாட்டு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுபாடுகள் விதிக்கபட்டன.
இந்த நிலையில் கொரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஜப்பானில் தொடங்க உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் காரணமாக உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கின்றனர்.