கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக் சென்ற ஹெலிகாப்டர் கோகட்டா நகரில் தரை இறங்கும் சமயத்தில் பயங்கரவாதிகள் ஹெலிகாப்டரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக், நேற்று தலைநகர் போகோடாவில் இருந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெனிசுலாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோகட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அவருடன் ராணுவ மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர் ஆகியோர் பயணித்தனர்.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் கோகட்டா நகரில் தரை இறங்கும் சமயத்தில் பயங்கரவாதிகள் ஹெலிகாப்டரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். ஹெலிகாப்டரில் 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. எனினும் விமானிகள் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கினர். அதனைத் தொடர்ந்து அதிபர் இவான் டியூக் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானிகளின் அசாத்திய திறமையால் ஹெலிகாப்டர் உடனடியாக தரை இறக்கப்பட்டதால் அதிபர் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அதிபரின் ஹெலிகாப்டரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.