சட்டமேதை அம்பேத்கருக்கு உத்தரபிரதேசத்தில் ரூ.50 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் கட்ட அந்த மாநில பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோவில் உள்ள ஐஷ்பாக்கில் அம்பேத்கர் நினைவு மண்டபம் மற்றும் கலாச்சார மையம் கட்டப்படுகிறது. இதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் 45 மீட்டர் உயரமுள்ள அவரது சிலை வைக்கப்படுகிறது. இந்த மையத்தின் ஒரு பகுதி டிசம்பர் முதல் வாரத்துக்குள் கட்டி முடிக்கப்படலாம்.
அம்பேத்கர் நினைவு மண்டபத்தை அவரது நினைவு தினமான டிசம்பர் 6-ந் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் பா.ஜனதா அரசு தீவிரமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தலித் சமூகத்தினரை கவர்ந்திழுக்கும் வகையில் அம்பேத்கருக்கு பிரமாண்ட நினைவு மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளது.