பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பால் கோவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது பிரிட்டன் அரசு. கட்டுப்பாடுகளின் பயனாக கொரோனா பாதிப்பும் குறைந்துள்ளது.
தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை19ஆம் தேதி அனைத்து கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் மேட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “கட்டுப்பாடுகளை தளர்த்தி ஜூலை 19ஆம் தேதி அனைத்தையும் திறப்பதற்கான பாதையில் பயணித்து வருகிறோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். குறிப்பாக அடுத்த வாரம் முதல் கொரோனா சூழல் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
கடந்த ஒரு வாரத்தில் கொரோன பாதிப்பு குறைந்து ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும், ஏராளமானோருக்கு டெல்டா வைரஸ் பரவியுள்ளதால் அரசு சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.