மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவ புரத்தில் பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச காணியினை தனி நபர் ஒருவர் சுவிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்து அதனை தடுத்து நிறுத்துமாறும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி காணிக்குள் ஒன்று கூடிய மக்கள் கையில் சுலோகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் சமூக இடைவெளியினை பேணி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்கள்.
‘ அரச சம தர்மம் செத்து விட்டதா? நீதி நிலை நாட்டப்படுமா ? , ‘நித்தம் நித்தம் ஏழை மக்களுக்கு போராட்டம் தானா ?. ‘அரசியல் வாதியே இதற்கான தீர்வு பெற்றுத் தர வேண்டும்.’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
இவ் காணியானது தாங்கள் அறிந்தவரை ‘தேர் இழுத்த வெம்பு’ என அழைக்கப்பட்ட காட்டு பிரதேசமாகும்.
அக்காலப் பகுதியில் விறகு சேகரித்தும், நாவல் பழம் பொறுக்கியும் வாழ்ந்தனர், எவரும் அதனை உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களுக்கும் இவ்விடத்தில் காணி வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த நபர் சுமார் 25 ஏக்கர் காணியினை சுவிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என கூறுகின்றார்கள்.
இவ்விடயம் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
2008 ஆண்டு காலப் பகுதியில் இதற்கான காணி அனுமதி பத்திரங்கள் 12 நபர்களுக்கு வழங்கப்பட்டு உரியவர்களுக்கு உரிமையாகும் வகையில் அளிப்பு உறுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் பொது மக்கள் சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் சனிக்கிழமையன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதால் அதில் இதற்கான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு கூறினார்.