கொரோனா செயலணி முற்றிலும் தோல்வியடைந்த அமைப்பாகி விட்டது. அந்த பொறுப்பை அமைச்சும், செயலாளர்களும்தான் வகிக்க வேண்டும். இராணுவத்தளபதியென்பவர் ஒரு திணைக்களத்தின் தலைவர் மட்டும்தான். அதிலும் அதிகாரம் கூடிய அமைச்சர்களும், செயலாளர்களும் ஏன் அந்த பொறுப்பை ஏற்க முடியாமல் அச்சமடைகிறீர்கள். இந்த அரசாங்கம் இராணுவ மயமாக்கலையே செய்கிறது. அது அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
இன்று (23) நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்த பின்னர், இந்த நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையை ஆற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வரி நிவாரணத்தை செய்ததாக புள்ளிவிபரங்களை தெரிவிக்கிறது. அவர் பெரியவர்களிற்கு வரி நிவாரணத்தையும் ஏழைகளிற்கு பசியையும் வழங்கியுள்ளனர். அரசாங்கம் இன்று சமர்ப்பித்த புள்ளி விபரங்களிலும் நிறைய தவறுகள் உள்ளன. பல விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த காலம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்காமல், இதிலிருந்து எப்படி மீள்வதென ஒரு திட்டமிருக்கவில்லை. அரசாங்கம் அதை சமர்ப்பிக்கவில்லை.மாற்று வழியொன்று இல்லாமல் கடந்தகால புள்ளிவிபரங்களை பேசிக் கொண்டிருக்க முடியாது.
நாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அவை ஒன்றாக சேர்ந்து வெடித்தால் என்ன நடக்கும். அரசாங்கம் மட்டுமல்ல, பாராளுமன்றமே இல்லாமல் போய் விடும்.
சுகாதார அமைச்சரின் உரையை கேட்டால், கொரோனா தொற்றின் பின் அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பது தெரியும். இந்த கொரோனா செயலணி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
கொவிட் செயலணி தோல்வியடைந்து விட்டது. இராணுவத்தளபதி என்பவர் ஒரு திணைக்கள தலைவர் மட்டும்தான். ஏன் செயலணி பெறுப்பை அமைச்சரவை, செயலாளர்கள் ஏற்கவில்லை. அவர்கள்தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். அஞ்சாதீர்கள்.
உங்களிற்கு எதிராக கதைப்பார்கள், இங்கு கொண்டு வந்து போஸ்டர் பிடிப்பார்கள் என பயப்பிடுகிறீர்களா?
இராணுவ அதிகாரத்தை எடுத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆனால் இன்று இராணுவ மயமாக்கலிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். முதலீட்டுசபை கூட்டமொன்றில் அண்மையில் இராணுவத்தளபதி சென்று பேசியிருந்தார். அதை ஏற்காமல் அங்கிருந்தவர்கள் சென்று விட்டனர். எனக்கும் இராணுவத்தளபதிக்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனையில்லை.
அமைச்சரவை அதிகாரங்களை செயற்படுத்தாமல் இருப்பது அரசிலமைப்பை மீறும் செயல், மக்களின் ஆணையை மீறும் செயல் என்றார்.