திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள்.
நோய்த்தாக்குதல், பொருளாதார நெருக்கடி, தொழிலுக்காக அடிக்கடி புலம் பெயரும் நிலை போன்ற சிக்கல்களால் திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள். முன்பு ‘நாமிருவர் நமக்கு இருவர்’ என்ற நிலை இருந்தது. பின்பு ‘நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற கருத்து உருவானது. தற்போது ‘நாமிருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்’ என்ற சிந்தனையும், ‘நாமே குழந்தை.. நமக்கேன் இன்னொரு குழந்தை’ என்ற எண்ணமும் புதிய தம்பதியரிடையே உருவாகியிருக்கிறது.
எல்லா பெண்களுமே வேலை பார்த்து பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழும் பெண்களில் பலர் திரு மணத்தை பற்றியும், தாம்பத்ய வாழ்க்கையை பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை. காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் பொருளா தாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாய்மையை தள்ளிவைக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, `குழந்தை வளர்ப்பு என்பது ஒரு உணர்வு பூர்வமான கடமை. தான் பார்க்கும் உத்தியோகம் அந்த கடமையை நிறைவேற்ற தடைக்கல்லாக அமைந்துவிடுமோ?’ என்ற கவலையும் பல பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் பல தாய்மார்களுடைய வாழ்க்கை சூழலும் அமைந்திருக்கிறது. அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள் போல் இயங்குகிறார்கள். குழந்தைகளோடு கழிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காலையில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிச் சென்று இரவில் களைப்புடன் வீடு திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மனம் விட்டு பேசக்கூட அவகாசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் பொம்மைகளோடு பொழுதை கழிக்கின்றன. கம்ப்யூட்டரிலே மூழ்கி கனவு காண்கின்றன.
முன்பெல்லாம் குழந்தை இல்லாததால் பல பெண்கள் இல்லற வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களாக குழந்தைபேறு இல்லாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை அவர்களால் தடுத்து நிறுத்த இயலாமல் போயிருக்கிறது. அதனால் பல பெண்களின் குடும்ப வாழ்க்கை பாதியிலேயே முடிந்திருக்கிறது. இன்றைய நிலைமை அப்படி இல்லை. உத்தியோகத்தில் இருக்கும் சில பெண்கள், தங்கள் கடமைக்கு தடையாக மாறக்கூடாது என்று குழந்தை பெற்றுக்கொள்ளாமலே காலத்தை கடத்தும் மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் ஒரு பெண் காதலிக்க தொடங்கி, கல்யாணத்தை நோக்கி நகரும்போது, `குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா?’ என்ற கேள்வி அவள் முன் வைக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு தக்கபடிதான் அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளுமா? அல்லது திருமணம் செய்துகொள்ளாமலே வாழுமா? என்பது தெரியவரும். பெண், குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் நபரை அவள் திருமணம் செய்துகொள்கிறாள். குழந்தைக்கு தந்தையாக விரும்பாத ஆண் என்றால் அவரை அவள் திருமணம் செய்து கொள்வதில்லை.
இந்தியா மக்கள் தொகை அதிகமுடைய நாடுதான் என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை. திருமணமும், குழந்தைப் பேறும் மங்களகரமான விஷயமாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் வாழ்க்கையில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பாவிக்கப்படுகிறது.
அவரவர் விருப்பப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருசில முடிவுகளை எதிர்கால நலன் கருதி எடுக்கவேண்டியதிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு குழந்தை களால் மட்டுமே உருவாகிறது. ஒரு குழந்தை கூட இல்லாமல் கணவன்-மனைவி இருவர் மட்டுமே
குடும்பம் ஆகிவிட முடியாது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிதி நிலைமை, பதவி, அந்தஸ்து இதெல்லாம் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமூக பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலமே அந்த சமூக பாதுகாப்பை அடைய முடியும். குடும்பத்திற்கு குழந்தைகளும் தேவை.