டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் திருநங்கையான லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை, நியூசிலாந்து பிரதமர் வரவேற்றுள்ளார்.
நியூஸிலந்தைச் சேர்ந்த ஹப்பார், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில், 87+ கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குபெறுகிறார்.
43 வயதான ஹப்பார்ட், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டது, கலவையான அபிப்பிராயங்களை எழுப்பியுள்ளது.
இந்த முடிவு, வரவேற்கப்பட வேண்டியதென பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எனினும், திருநங்கை ஒருவர், பெண்கள் பிரிவில் போட்டியிடுவதால் அது மற்ற பெண் விளையாட்டாளர்களுக்கு நியாயமற்ற போட்டியை ஏற்படுத்தும் என்ற குறைகூறலும் எழுந்துள்ளது.
ஹப்பார்ட் இதற்கு முன்னர் ஆண்கள் பிரிவில் போட்டியிட்டு வந்தார்.
அனைத்துலக ஒலிம்பிக் குழு, 2015ஆம் ஆண்டு சில விதிமுறைகளை வெளியிட்டது.
அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால், திருநங்கைகள், ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியும்.
முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன், குறைந்தது ஓராண்டுக்காவது அவர்களிடம் ஆண்மைக்குக் காரணமான testosterone இயக்குநீர் அளவு, குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் இருக்கவேண்டும் என்பது, அந்த விதிமுறைகளில் முக்கியமானது. அதில் ஹப்பார்ட் தேறியுள்ளார்.