எனது வயதை விட அதிககாலம் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்; இனியாவது அவர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்: நாடாளுமன்றில் நாமல்!

Date:

தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்டகாலமாக வழக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான் சிறையில் இருந்தபோது பலரை சந்தித்து பேசினேன். மரக்கிளையொன்றை வெட்டியதற்காக ஒருவர் சிறையில் உள்ளார். எனது வயதை விட அதிக காலம் சிறையில் கழிப்பவர்களை சந்தித்தேன் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களது சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் பிணை பெற முடியாமல், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கடந்த நல்லாட்சியில் நாங்களும் சிறை வைக்கப்பட்டோம். நான் மட்டுமல்ல, அமைச்சர் உதய கம்மன்பில, ஜோன்சன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் இருந்தனர். சிறைச்சாலைகள் இருக்கும் நிலை என்னவென்பது எமக்கு தெரியும்.

எனது அப்பா தராத படிப்பினையை இவர்கள் தந்தார்கள். வழக்கு இல்லாமல் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் உள்ளனர்.நீண்டகாலமாக வழக்கு விசாரணையில்லாமல் தண்டனை அனுபவிப்பவர்கள் 35 பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களிற்கு கிடைத்த தண்டனையை விட கூடுதான காலம் விளக்கமறியலில் கழித்துள்ளனர்.

நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 28 வழக்குகள் உள்ளன.20 வருடங்களாக இந்த வழக்குகள் உள்ளன. எவ்வித வழக்குமில்லாத 13 பேர் உள்ளனர். விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பகிர்வு சமர்ப்பிக்கப்படாத 116 பேர் உள்ளனர்.

அவர்கள் அறியாமல் தவறு செய்திருக்கலாம். அறிந்து தவறு செய்திருக்கலாம். அவர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனில் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும், தண்டனை வழங்கப்பட வேண்டும்.  அவர்களிற்கு குற்றப்பத்திரம் வழங்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச அரசில் 12,000 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளிற்கு பனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அதில் 3,500 பேருக்கு சிவில் பாதுகாப்பு படையில் தொழில் வழங்கப்பட்டது.

யுத்தத்தின் இறுதியில் களத்தில் இருந்தவர்கள் இவர்கள். நான் சிறையில் இருந்தபோது அவர்களில் சிலரை சந்தித்து பேசினேன். அவர்களில் சிலர் சிறையில் கழிப்பது எனது வயதை விட அதிக வருடங்கள்.  அவர்களிற்கு எதிராக குற்ற்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.

நான் சந்தித்த ஒருவர், படுகொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானவர். அவர் செய்த குற்றம் ஒரு மரத்தின் கிளையை வெட்டியதுதான். ஆனால் அந்த படுகொலையின் பிரதான நபர் மன்னிப்பு பெற்று விடுதலையாகி விட்டார்.

உங்களோடு அந்த காலத்தில் எனக்கு தொடர்பில்லை. சிறையில் உள்ளவர்களை பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்ளுடைய சம்வங்களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். சிறையில் சந்தித்தவர்களை பற்றிதான் நான் பேசுகிறேன்.

12,000 பேரை விடுவிக்க முடியுமாக இருந்தால், இந்த வழக்குகளையும் நாம்கருணை கொண்டு பார்க்க வேண்டும். நீதிமன்றத்தால் அவர்களிற்கு பிணை வழங்க முடியாவிட்டால், சட்டமா அதிபரை நாட வேண்டும். அல்லது வேறு ஏதோ ஒரு வழியில் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அல்லது நியாயம் வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, சட்டத்தின்படிதான் ஒருவருக்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தண்டனை அனுபவிக்கிறார்கள். அதைவிட நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். இதற்கு ஒரு பொறிமுறை உருவாக்கப்படும். இன,மத பேதமின்றி இதை செயற்படுத்துவோம்.

வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க வேண்டும். சட்டமா அதிபருடன் இது பற்றி பேசியுள்ளேன். சிறையில் உள்ளவர்களின் மனக்குறைகளை என்னிடம் சொல்லியுள்ளனர். வழக்கு தொடராமல் அவர்களை நீண்டகாலம் உள்ளே வைத்திருக்க முடியாது. ஒன்றில் வழக்கு தொடர வேண்டும். அல்லது விடுவிக்க வேண்டும். அது பேச்சில் அல்லாமல் செயலில் செய்வோம்.

இது ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்காக அல்ல. நாட்டின் சட்டங்கள் மேம்பட வேண்டும். 3 தசாப்தங்களிற்கு மேற்பட்ட சட்டங்களை சீர் செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லாமல், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

 

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்