நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்து பி.ஜி. ஒன்றில் தங்கியிருந்தபோது அதன் உரிமையாளர் தன் மீது திருட்டுப் பழி சுமத்தியதாக பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு வெளியான யஹான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் மினிஷா லம்பா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் நடிகையாகும் ஆசையில் மும்பைக்கு வந்தபோது கையில் அவ்வளவாக பணம் இல்லை. அதனால் பி.ஜி. ஒன்றில் தங்கியிருந்தேன். அங்கு நடந்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றார்.
நான் தங்கியிருந்த பி.ஜி.யின் மாத வாடகை ரூ. 5 ஆயிரம். என் அலமாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டாய் என்று பி.ஜி. உரிமையாளர் பெண் என் மீது பழிபோட்டார். ஆனால் நான் பணத்தை திருடவில்லை. இது கவுரவப் பிரச்சனை என்பதால் இரண்டு நாட்களில் அந்த பி.ஜி.யில் இருந்து வெளியேறினேன். என்னிடம் பணம் இல்லை. அதனால் ரூ. 7 ஆயிரத்திற்கு ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்தேன் என்று மினிஷா தெரிவித்தார்.
ஃபிளாட் என்றால் அது ஒரேயொரு அறை தான், சிறிய அறை. ஆனால் ரூ. 7 ஆயிரத்திற்கு மேல் என்னால் வாடகை கொடுக்க முடியாது. நான் பணத்தை திருடவில்லை என்பது பி.ஜி. உரிமையாளருக்கு பின்னர் தெரிய வந்தது. அலமாரியில் அவர் வைத்த இடத்தில் தான் அந்த பணம் இருந்திருக்கிறது. அதன் பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார். திருட்டுப்பட்டம் சுமத்திய இடத்தில் இருக்கவே கூடாது என்று தான் அங்கிருந்து கிளம்பினேன் என மினிஷா லம்பா கூறினார்.
மினிஷா லம்பாவுக்கும், பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடியின் உறவினரான ரயன் தாமுக்கும் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் திகதி திருமணம் நடந்தது. மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் ட்ரைலாஜி நைட்கிளப்பின் உரிமையாளர் ரயன். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதாக அறிவித்தனர்.