பயண தடைகளை நீக்கிய பின்னர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கண்காணிக்க, இன்று முதல் தினமும் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் மூத்த டி.ஐ.ஜி அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
பொது போக்குவரத்து மற்றும் கடைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை செயல்பாடுகள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகளை ஆய்வு செய்வார்கள்.
மேல் மாகாணத்தின் உள்நுழையும், வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுளள் 14 சோதனைச்சாவடிகளிற்கு மேலதிகமாக, மாகாணத்தில் 700 சோதனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
அதன்படி 8,000 பொலிசார் மேற்கு மாகாணத்தில் நிறுத்தப்படுவார்கள்.
அத்தியாவசிய சேவைத் தொழிலாளர்கள் மட்டுமே மாகாணங்களிற்கிடையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.
சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் காவல்துறையினர் சிவில் ஆடைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, வளாகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தால் நிறுவன உரிமையாளர் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.