மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரி ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) இரவு முற்றுகையிட்டு 14.75 கிராம் ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம், 3 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது 3 பேரை கைது செய்ததுடன் பிராதன வியாபாரி தப்பியோடியுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- கொழும்பு தனியார் பஸ்வண்டியில் நடத்துனராக கடமையாற்றும் ஒருவரும், அவரது தாயாரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப் படையினருடன், இராணுவ புலனாய்வு பிரிவினர் நகர் பகுதியில் உள்ள லொயிஸ் அவனியூ வீதியிலுள்ள குறித்த வீட்டை இரவு 8 மணிக்கு முற்றுகையிட்டனர்.
பிரதான போதை பொருள் வியாபாரியும் அவரது தாயாரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையல் அங்கிருந்து போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத தொடர்ந்து குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தரை வரவழைத்து வீட்டை இரவு 11 மணி வரை சோதனை செய்ய போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்து ஐஸ் போதைப் பொருள், போதைப்பொருள் பொதி செய்யும் இயந்திரம், நிறுக்கும் தராசு மற்றும் போதை பொருள் யார் யாருக்கு விற்பனை செய்தது அவர்களிடம் வாங்கிய பணம், வங்கியில் பணம் அனுப்பியது, வைப்பிலிட்டது போன்ற தரவுகள் எழுதப்பட்ட புத்தகம் உட்படவை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.