இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. அவர்கள் இருவருக்கும் போட்டியாக, தற்போது நடிகை டாப்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார்.
இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம். அவர் நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது.
இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரேணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார். இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.