கொரோனா தடுப்பூசி போட வந்த மருத்துவ குழுவை கண்டு கிராம மக்கள் பயந்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஆபத்து என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி குறித்து மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
ஆனாலும் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய, மாநில அரசுகளும் மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போட மருத்துவத்துறையினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தடுப்பூசி போட வரும் மருத்துவர்களை பார்த்த உடனே அப்பகுதி மக்கள் வீட்டை வெளியே பூட்டிவிட்டு பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் பதுங்கிக்கொள்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 28 ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவது பெரும் சவாலாக உள்ளது. தடுப்பூசி போட வருவதாக தெரிந்தால், வனப்பகுதிக்குள் ஒடி ஒளிந்து கொள்வது, வீட்டை வெளியே பூட்டிவிட்டு உள்ளே இருப்பது, அப்படியும் மீறி உள்ளே வந்தால் கட்டிலுக்கு அடியிலும், போர்வை குவியலிலும் பதுங்கிக்கொள்வதுமாக இருக்கின்றனர்.
தடுப்பூசி போட வருபவர்களை சிலர் கடுமையாக திட்டவும் செய்கிறார்கள். அவர்களின் மொழியில் பேசி விளக்கி, தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சவாலான பணியாகவே உள்ளது