தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில் ராம்சரணை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது வெளியிடப்படவில்லை. குறிப்பாக இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி ஆலியா பட், மாளவிகா மோகனன் போன்றோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலையில் நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம். நடிகை கியாரா அத்வானி நடிப்பில் கடைசியாக லட்சுமி படம் வெளியானது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.