ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜிம்மி லாய், சீனாவுக்கு எதிராக போராடிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகை தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான 18 மில்லியன் ஹாங்காங் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 கோடி) சொத்துக்களையும் போலீசார் முடக்கினர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே போல் ஆப்பிள் டெய்லி பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் உரிமையாளர் ஜிம்மி லாய் மற்றும் அவரது மகன்கள் 2 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.