இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ரக டிரீம் லைனர் சரக்கு விமானம் இன்று தரையிறங்கியது.
அதன்பின், அந்த விமானம் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, விமானம் ரன்வேயில் சறுக்கிச் சென்று விபத்தைச் சந்தித்தது. விமானத்தின் முன்பாகம் ரன்வேயில் சரிந்து விழுந்தது.
சரக்கு விமானம் என்பதால் பயணிகள் யாரும் அந்த விமானத்தில் இல்லை. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரன்வேயில் சரிந்து கிடந்த விமானத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.
ரன்வேயில் தேங்கி இருந்த மழைநீரால் விமானம் சறுக்கி விபத்தைச் சந்தித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.