பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 98,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,449 பேர் பலியாகினர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடி ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,98,621 ஆகவும் உள்ளது. 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் 27% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில்தான் உலக அளவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற ஆலோசனை பரிசீலனையில் உள்ள நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது சமீபகாலமாகக் குறைந்ததன் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.