பயணத்தடை காலத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் உற்பத்திகளை கண்டறியும் வகையில் பொலிஸ் குழுக்களினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பயணத்தடை நேரத்தில் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸாரால் வியாழக்கிழமை (17 ) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ். அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைவாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்ப்திகாரி நிஷாந்த ஹப்புகாமியின் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்த விஷேட நடவடிக்கையின்போது 17 பரல்களில் 3400 லீற்றர் கோடா, 75 லீற்றர் கசிப்பு, மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் இச் சட்டவிரோத நடவடிக்கையினை மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடை காலத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்ப்திகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.