இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியும் சம பலத்துடன் திகழ்வதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது எனக் கூறப்படுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூலை 3 இங்கிலாந்து சென்று, தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி நல்ல பார்மில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள், ‘நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றதால், அவர்கள் காலநிலையை நன்கு பழக்கப்படுத்தியிருப்பார்கள். வெற்றிக்கு இது பெரும் உதவிக்கரமாக இருக்கும். இதனால் நியூசிலாந்து அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்” என சச்சின் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இறுதிப் போட்டி குறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் டிம் பெய்ன், “என்னுடைய கணிப்பின்படி, இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும்” எனத் தெரிவித்தார்.
பெய்ன் ஆஸ்திரேலிய அணிக் கேப்டனாக இருக்கும்போதுதான், இந்திய அணி இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனால், பெய்னுக்குத்தான் மற்றவர்களைவிட இந்திய அணி குறித்து நன்கு தெரியும் எனக் கருதப்படுகிறது. தற்போது அவர், இந்திய அணிதான் வெற்றிபெறும் எனக் கணித்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.