உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்னமும் இருந்து வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை செலுத்தி வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் காலூன்றி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு போலியோ தடுப்பூசி குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் கடந்த சில நாட்களாக போலியோ தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஜலாலாபாத்தில் போலியோ தடுப்பூசி குழு உறுப்பினர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.