இரா. சங்கையா,
யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர்,
நிர்வாகச் செயலாளர் த.வி.கூ.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இன்று 15.06.2021 அகவை எண்பத்தியெட்டு (88). மற்றவர்களைப் போல சாதாரணமாக அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை. மிகப் பெரிய போராட்டங்கள் மூலமாகவே அவர் வெற்றிபெற வேண்டியிருந்தது. கிளிநொச்சியில் அவர் ஒரு ஆசிரியாராகவே காலடி எடுத்து வைத்தார். அதுவும் கிளிநொச்சித் தொகுதியிலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த பூனகரிப் பிரதேசத்திலேயே அவர் கடமையாற்றினார். அங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதில் இருந்த இன்னல்கள் மற்றும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்கள் மட்டுமல்லாது மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் வசதி வாய்ப்புகள் உள்ள மிகப் பிரபல்யம் பெற்ற பள்ளிகளோடு போட்டி போட்டுத்தான் புள்ளிகளைப் பெற வேண்டும் என்ற நிலையும் இருந்து வந்தது. பின்னாளில் அவர் கிளிநொச்சித் தொகுதியை தனிமாவட்டமாக மாற்றுவதற்குகான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
அன்று உழைக்கும் வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடி வந்த சமசமாஜக் கட்சியின் இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவரால், கிளிநொச்சித் தொகுதியில் ஏழை விவசாயிகள் படும் துன்ப துயரங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த காலத்தில் கிளிநொச்சியில் அனேகமான காணிகள் பெரும் கமக்காரர்கள் மற்றும் நிலச்சுவாந்தர்களின் கைகளிலேயே இருந்தன. சிறுவிவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட் நிலையிலேயே இருந்தனர். இரணைமடு குளத்துநீர் பெரும் கமக்காரர்களுக்கு மட்டுமே பகிர்ந்;தளிக்கப்பட்டது. இதனால் ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை உணர்ந்த ஆனந்தசங்கரி அவர்கள் ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க அவர்களை இணைத்துக் கொண்டுகளத்தில் இறங்கி போராட்டங்களை நடத்தினார். அதன் விளைவாக இரணைமடு குளத்துநீர் ஏழை விவசாயிகளின் காணிகளுக்கும் குடியேற்றத் திட்ட மேட்டுக்காணிகளுக்கும் பகிர்ந்;தளிக்கப்பட்டது.
ஏழை மக்களின் பங்காளனாக அவர் திகழ்ந்தார். அதன் விளைவாக கிளிநொச்சித் தொகுதிமக்கள் அவரை கிராமசபைத் தலைவராக, பட்டிணசபைத் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். தன்னந்தனியாக தனியாளாக கிளிநொச்சித் தொகுதிக்கு வந்த ஆனந்தசங்கரி அவர்களை கிளிநொச்சித் தொகுதி மக்கள் படிப்படியாக தங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாகும். தன் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் கிளிநொச்சி தனிமாவட்ட கோரிக்கையாகும். இந்த கோரிக்கை எழுப்பப்பட்டவுடன் பலர் எள்ளி நகையாடினார்கள்;. கேட்டது தனி நாடு இப்போது கேட்பது தனிமாவட்டமா? என்று கேள்வி எழுப்பினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் எதிர்ப்பைக் காட்டினார்கள். கட்சிக்குள்ளும் எதிர்ப்பு. பிரதேச வாதம் என பலர் எரிந்து விழுந்தார்கள். ஆனால் சரியான புள்ளி விபரங்களுடன் ஆதாரங்களை முன்வைத்து பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து எல்லோரினதும் வாய்களையும் அடைத்து, கிளிநொச்சியை தனிமாவட்டமாக உருவாக்கினார். அதன் விளைவாக பின் தங்கிய மாவட்டமான கிளிநொச்சியில் இருந்து அதிகளவான மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பட்டதாரிகள், சட்;டத்தரணிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் என பலர் உருவாகிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலகம், மாவட்ட வைத்தியசாலை, மாவட்டக் காணி அலுவலகம் என கிளிநொச்சி தனி அந்தஸ்த்தை அடைந்து விட்டது. இதற்கெல்லாம் வித்திட்டவர் ஆனந்தசங்கரி அவர்கள்தான் என்பதை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிரம் போதாது எனக்கூறி இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. அதன் விளைவுகளால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டார்கள். பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்கள். இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடைய முயற்சியில் சிறிதும் தளராது முன்னேறிக்கொண்டிருந்தது. 2001ம் ஆண்டளவில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் தமிழத்; தேசிய கூட்டமைப்பு உருவானது. 2002ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளில் முதலாவதாக அதிகப்படியான வாக்குகள் பெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலம்வாய்ந்த ஒரு சக்தியாக செயற்பட்டுக்கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து செயற்பட்டால்தான் அவர்களின் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்ற காரணத்தினால், அவர்களை ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டு அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டால் எமது ஜனநாயகக் குரலும், புலிகளின் ஆயுதக் குரலும் ஒன்றாக ஒலிக்கும், இது சர்வதேச சமூகத்துக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிடும். எனவே நாம் தனித்து நின்று புலிகளின் குரலுக்கு உந்து சக்தியாக செயற்படுவோம் என்ற யதார்த்தத்தை திரு. ஆனந்தசங்கரி எடுத்துக் கூறினார். அதை விரும்பாத சிலர் இவர் புலிகளுக்கு எதிரானவர் என்ற முத்திரை குத்த ஆரம்பித்தனர். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பதற்கிணங்க நிலைமை போனது.
இறுதிகட்ட யுத்தத்தின் போது யுத்தத்தின் விளைவு எப்படி இருக்கும் என்ற யதார்த்தத்தினை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு ஒரு யுத்தத்தை நடத்தினால் அதன் முடிவு நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் எத்தகைய அபகீர்த்தியை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதிக்கும் பல கடிதங்களை எழுதினார். இரண்டு தரப்பினரும் இவரின் அறிவுரைகளை கேட்டிருந்தால் எமது மக்கள் இவ்வளவு இன்னல்களையும் அவலங்களையும் சந்தித்திருக்கமாட்டார்கள். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானுங் கெடும்” என்பது நிரூபிக்கப்பட்டது. ஒரு சமூகத்திடம் பொய்களைக்கூறி வெற்றிபெறுவதைக் காட்டிலும், உண்மையைக் கூறி தோல்வி அடைவது மேலானது என்று ஒரு அறிஞன் கூறியதற்கிணங்க செயற்படும் ஒரு தலைவராக இருக்கின்றார்.
இலங்கையில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பேதமன்றி ஒற்றுமையுடன் வாழ்வதையே அவர் விரும்புகின்றார். அதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயற்படுகின்றார். அதனால்தான் அவர் எப்பொழுதும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையுடன் வாழும், மாநிலங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரமுடைய இந்திய முறையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தி வருகின்றார். இனிவரும் காலங்களிலாவது அவருடைய சரியான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயற்படுவார்களேயானால் எமது மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும்.
மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து செயற்படும் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்ந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.