பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (12,113 புள்ளி) முதலிடத்திலும், ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் (10,143 புள்ளி) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,630) 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (7,980 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,425 புள்ளி) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி (8,245 புள்ளி), ஜப்பானின் நவோமி ஒசாகா (7,401 புள்ளி), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (6,330 புள்ளி), பெலாரஸ்சின் சபலென்கா (6,195 புள்ளி), அமெரிக்காவின் சோபியா கெனின் (5,865 புள்ளி) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா (3,733 புள்ளி) 18 இடங்கள் ஏற்றம் கண்டு 15-வது இடத்தை எட்டியுள்ளார். 2-வது இடம் பெற்ற ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (3,300 புள்ளி) 13 இடங்கள் உயர்ந்து 19-வது இடத்தை பிடித்துள்ளார்.