தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.