25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிறிஸ்தவ கல்லறை சேதம்; பதிலடியாக இந்து மயானம் சேதம்: யாழில் சாதிய மோதலை தூண்ட திரைமறைவு முயற்சி?

மயானத்தை சமரசம் உலாவும் இடம் என்பார்கள். அங்குதான் பேதமிருக்காது எல்லோரும் உயிரற்ற சடலங்களே. ஆனால், அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மயானங்களை வைத்தே நிறைய சச்சரவுகள் உருவாக்கப்படுகிறது. சமூகங்களிற்குள் உருவாகும் சின்னச்சின்ன சச்சரவுகளை, ஊதிப் பெருப்பித்து, அரசியல் செய்ய பல வல்லூறுகள் காத்திருக்கும் அப்படியொரு சம்பவமே வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் நடந்துள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவரின் கல்லறையை அடித்து உடைத்ததாக, சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் தகவல் உண்மையா?, இதன் பின்னணி என்ன என்பதை அலசும் செய்தித் தொகுப்பு இது.

நெல்லியடி சந்தியிலிருந்து திக்கம் கடற்கரை நோக்கி செல்லும் போது, வதிரி சந்திக்கு அப்பால், இடதுபக்கமாக செல்லும் வீதியில் அமைந்துள்ளது வதிரி ஆலங்கட்டை இந்து மயானம்.

7 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த  சுமார் 840 குடும்பங்கள் இந்த மயானத்தை பாவிக்கிறார்கள். மயானம் சமரசம் உலாவும் இடம் என்பது ஆலங்கட்டை இந்து மயானத்திற்கும் பொருந்தும். எல்லா சமூகத்தினரும், சமயத்தினரும் உடல்களை தகனம் செய்யலாம்.

வடமராட்சியில் ஏனைய மயானங்களில் சாதிக்கு ஒரு எரியூட்டும் படுக்கை உள்ளது. ஆலங்கட்டை இந்து மயானத்தில் மட்டுமே, ஒரே படுக்கையில் உயிரிழந்த மனிதர்களை தகனம் செய்யும் நடைமுறையுள்ளது. இதன் அர்த்தம் வதிரியில் சமத்துவம் நிலவுகிறதென்பதல்ல. ஆனால், முன்னோக்கிய நடவடிக்கைகள் உள்ளன என்பதை பாராட்டத்தானே வேண்டும்!

ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யும் கிராம சேவகர் பிரிவுகளில் 16 மெதடிஸ்த மிசன் குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 10 இற்கும் குறைவான குடும்பங்கள் தற்போது பிரதேசத்தில் வசிக்கின்றன. அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் மயானத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர்.

அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டு, இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்ட பெயர் பலகை

எனினும், இடப்பற்றாக்குறை காரணமாக சில வருடங்களின் முன்னர் மயான நிர்வாகம், அங்கு உடல்களை அடக்கம் செய்து கல்லறை கட்டுவதை நிறுத்தும் தீர்மானத்தை எடுத்தது. மாறாக அனைவரும் பேதமின்றி உடல்களை தகனம் செய்யலாமென தீர்மானிக்கப்பட்டது. இது கரவெட்டி பிரதேசசபையினால் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

இது கரவெட்டி பிரதேசசபை எடுத்த விபரீத தீர்மானமல்ல. நாடு முழுவதும் மின் மயான முறைதான் ஊக்குவிக்கப்பட்டு, பரவலடைந்து வருகிறது.

கிறிஸ்தவ கல்லறை உடைக்கப்பட்டதா?

ஆலங்கட்டை இந்து மயானத்தில் மெதடிஸ்த மிசன் சமயத்தவர்களின் கல்லறை உடைக்கப்பட்டதாக ஓரிரு தனிநபர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அது குறித்து தமிழ்பக்கம் சுயாதீனமாக விசாரித்ததில் பல தகவல்களை பெற்றது.

25 வருடங்களின் முன்னர் உயிரிழந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒருவரிற்கு பெயர்ப்பலகை அமைக்க, அவர்களின் உறவினர்கள் என கூறிய சிலர் கரவெட்டி பிரதேசசபையில் அனுமதி கோரியுள்ளனர்.

பதிலடியாக உடைக்கப்பட்ட மயான கட்டுமானம்

எனினும், கரவெட்டி பிரதேசசபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை. பிரதேசசபை தீர்மானத்திற்கமைய அங்கு புதிய கல்லறை கட்டுமானங்கள் செய்ய முடியாது என்பதையும், அவர்களிற்கு அனுமதியளித்தால், புதிய கல்லறை கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினர்.

விடயம் அந்தளவில் முடியவில்லை.

பயணத்தடை விதிக்கப்பட்டு, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமயத்தில், திடீரென அங்கு பெயர்ப்பலகை கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. மாலை வேளையில் கட்டுமானம் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயணத்தடைக்குள் சட்டவிரோதமாகவே இந்த கட்டுமானம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இரவோடு இரவாக புதிதாக அமைக்கப்பட்ட கல்லறையின் பெயர் கட்டுமானம் உடைக்கப்பட்டது. அதை யார் செய்தது என்பது தெரியாது. இதை சாதி பிரச்சனையாக சித்தரிக்க தலைகீழாக நின்று முயற்சிக்கும் சிலர், கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் மற்றும் சிலரின் பின்னணியில் அது நடந்ததாக குற்றம்சாட்டினர். எனினும், அது தவறான குற்றச்சாட்டு என்றே அறிய முடிகிறது.

கல்லறைக்கு உரியவரின் உறவினர்கள் என குறிப்பிடும் சிலரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லறை கட்டுமானத்தை உடைத்துதான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமா? உடைப்பது நாகரிகமான அணுகுமுறையா என்ற கேள்விகள் உள்ளன. ஆனால், அப்படியான சூழ்நிலையை அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சட்டவிரோத கட்டுமாணத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனித்தே தீர வேண்டும்.

பதிலடியாக உடைக்கப்பட்ட கட்டுமானங்கள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, மயானத்தில் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட சில கட்டுமானங்கள் உடைக்கப்பட்டன. மயானத்தின் வெளிப்புறத்தில் தோரண வடிவத்தில் அமைக்கப்பட்ட கட்டுமாணங்கள் இரவோடு இரவாக உடைக்கப்பட்டது.

கல்லறை பெயர்ப்பலகை உடைக்கப்பட்டதற்கு பதிலடியாக உடைக்கப்பட்டதா? அல்லது இந்த விடயத்தை வைத்து சாதிய மோதலை தூண்டி விட முயலும் தரப்புக்களால் உடைக்கப்பட்டதா என்பது கண்டறியப்பட வேண்டியது.

மயான நிர்வாக குழுவின் கூடுதல் பொறுப்பு

இந்து மயானம் என்ற பெயர் பலகை தற்போதுதான் வந்தது, முன்னர் அப்படியிருக்கவில்லையென இப்பொழுது சிலரால் கூறப்படுகிறது. இதை கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் மறுத்துள்ளார். 1949ஆம் ஆண்டு யாப்பிலேயே, ஆலடி இந்து மயானம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்.

பின்னர், இடைச்செருகலாக, மெதடிஸ்த மிசனை சேர்ந்தவர்களின் சடலங்களையும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

அத்துடன், மயான நிர்வாக குழுவில் மெதடிஸ்த மிசன் சமயத்தினரும் அங்கம் வகித்து வந்துள்ளனர். கடந்த நிர்வாக சபையின் செயலாளராக பதவி வகித்தவரும் மெதடிஸ்த சமயத்தவரே.

எனினும், இந்த விதமான சாதி, சமய குற்றச்சாட்டுக்களுடன் அரசியல் செய்ய முயலும் தரப்பினருக்கும் இடமளிக்காத விதமான நிர்வாகத்தை செயற்படுத்துவது மயான நிர்வாக சபையின் பொறுப்பு. மயான நிர்வாக தெரிவில் சாதி ரீதியான ஒதுக்கீடுகள் வழங்கும் அணுகுமுறை தவறு. அதை கடைப்பிடிக்கவே கூடாது. நிர்வாக செயற்பாட்டில் பங்கேற்கும் அனைவருக்குமிடையிலிருந்து தெரிவுகள் இடம்பெற வேண்டும்.

அதேபோல, அந்த நிர்வாக செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும்- சாதி, சமய வேறுபாடின்றி பங்கேற்கும் சூழலை, மயான நிர்வாக சபை கூடுதலாக உறுதிப்படுத்த வேண்டும்.

இந்து தான் பிரச்சனையே!

ஆலங்கட்டை இந்து மயானம் என்ற பெயரை மாற்றும் படி கடந்த 2 வருடங்களாக மெதடிஸ்த மிசன் சமூகத்தின சிலர் பிரதேசசபையிடம் கோரி வருகின்றனர். இருப்பது 10 இற்கும் உட்பட்ட குடும்பங்கள்தான்.

கரவெட்டி பிரதேசசபையின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில், “கடந்த 2 வருடங்களாக பிரதேசசபையிடம் மெதடிஸ்த மிசன் மதத்தினர் இந்து மயானம் பற்றி பேசி வருகிறார்கள். அண்மையில் ஒருவர் வந்து பேசும்போது, தாம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே கடவுளாக கொண்டவர்கள். மரண அஞ்சலி விபரம் ஒலிபெருக்கியில் அறிவிக்கும் போது, இந்து மயானத்தில் அடக்கம் செய்வதாக அறிவிப்பது நல்லதல்ல என எமது மக்கள் கருதுகிறார்கள். கேட்பவர்களும் எங்களை இந்துக்களென நினைத்து விடுவார்கள் என்றார். எனினும், 1949ஆம் ஆண்டு யாப்பில் உள்ளபடி, இந்து மயானம் என்ற பெயரை மாற்ற முடியாதென நாம் கூறிவிட்டோம் என்றார்.“

அந்த மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் மெதடிஸ்த மிசன் குடும்பங்களுடன் பேசியபோது,

“இந்துக்களின் உடல்கள் ஒரே இடத்தில் எரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்களிற்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மினசரியினரின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதால் அதிக இடம் தேவை. ஆனால் எமக்கு சிறிய இடம்தான் உள்ளது.

மயான பராமரிப்பு சபையிலும் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் பலருக்கு தெரியாது. யாராவது உயிரிழந்து, சடங்களை அடக்கம் செய்ய வழங்கப்படும் பற்றுச்சீட்டுத்தான், அந்த சபையின் அங்கத்துவ சீட்டு.

பொதுமயானம் என்றுதான் பதிவுகள் உள்ளன. இப்பொழுது சில வருடங்களாகவே இந்து மயானம் என பெயர்ப்பலகை நாட்டியுள்ளனர். அதையே அகற்ற கோருகிறோம்“ என்றனர்.

சாதி அரசியல்

மெதடிஸ்த மிசன் சமூகத்தினருடன் தொடர்புபட்ட இந்த விவகாரத்தை சாதி அரசியலாக்கி, நன்மைபெறும் முயற்சியில் அந்த பிரதேசத்தில் சிலர் ஈடுபட்டனர். மெதடிஸ்த மிசன் சமயத்தில் ஒரு சமூகத்தினர் மட்டுமிருக்கவில்லை. பல்வேறு சமூகத்தினர் உள்ளனர்.

கரவெட்டி பிரதேசசபை உறுப்பினரான நாகேந்திரன் புஷ்பவசந்தன் என்பவர் சாதிய மோதலை தூண்டும் விதமான நச்சு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமது சமூகத்தினரை திரட்டி, வெளியிடத்திலிருந்து (வேறொரு குறிப்பிட்ட சாதியினரை) சடலங்களை கொண்டு வந்து தகனம் செய்ய அனுமதிக்க விடாமல் போராட்டம் செய்வோம் என மிரட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மக்கள் பிரதிநிதியாக அரசியல் களத்திற்கு வருபவர்கள், சமூகங்களிற்குள் பிளவை ஏற்படுத்துபவர்களாக அல்லாமல், சமூகங்களை ஒருங்கிணைத்து முன்னோக்கி செல்பவர்களாக செயற்பட வேண்டும்.

அந்த பிரதேசத்தில சமூகங்களிற்கிடையிலுள்ள சக வாழ்வை சீரழித்து, அதில் அரசியல் ஆதாயம் தேட முயலும் நச்சுக்களைகளை இனம்கண்டு, விழிப்புடன் செயற்பட வேண்டியது பிரதேச மக்களின் கடமை.

அத்துடன், கல்லறை பெயர் பலகை உடைக்கப்பட்ட இடத்தை அங்கஜன் இராமநாதனின் செயலாளரும் வந்து பார்த்தார். அங்கஜன் இராமநாதனின் தரப்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்விய விளையாட்டு உத்தியோகத்தர் ஒருவரும் அதை சாதி பிரச்சனையாக்க முயன்றார். அவர் பேசும், மத மோதல், சாதி மோதல் போல சித்தரிக்கும் வீடியோ ஒன்றும் வெளியானது.

அங்கஜன் இராமநாதன் தரப்பினர் கடந்த தேர்தலில் சாதிய வாக்குகளை குறிவைத்தே செயற்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வாழும் பகுதிகளிலேயே இவர்களில் இலவசம், வேலைவாய்ப்பு பிரச்சாரங்கள் எடுபட்டன. மக்கள் மத்தியில் மயக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலோ என்னவோ, அங்குள்ள கட்சிக்காரர்கள் சாதிய விவகாரத்தை வைத்து அரசியல் செய்யலாமென நினைக்கிறார்கள் போலும்!

யுத்தத்தின் பின்னராக காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களில் ஆளுந்தரப்பின் கைப்பொம்மைகளாக பணம், பதவிக்காக சாதிய மோதல்களை ஏற்படுத்தி, வாக்கு பெறலாமென முயன்ற பலர் இன்று அடிச்சுவடே இல்லாமல் வாழும் உதாரணங்களாக உள்ளனர். மயானத்தை வைத்து சாதிய மோதலை ஏற்படுத்த முயல்பவர்கள் இந்த வாழும் வரலாறுகளை படித்து அறிய வேண்டும். அல்லது, தாம் வாழும் சமுதாயத்தினாலேயே நிராகரிக்கப்பட்டவர்களாகுவர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment