இலங்கை கடலில் இறக்கப்படும் பழைய பேருந்துகளால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள காலியில் கடல் நீருக்கடியிலான முதல்அருங்காட்சியகம் கடந்த ஆண்டுதிறக்கப்பட்டது. காலி கோட்டையில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் 50 மீட்டர் ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இந்தக் கடலடி அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான சிற்பங்கள் மற்றும் சிலைகள், பழைய ராணுவத் தளவாடங்கள், பழையவாகனங்கள், செயற்கை பாறைகளும் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகளை ரசிக்க கண்ணாடிப் படகுகள் அல்லது ஸ்கூபா டைவிங் மூலம் பயணிக்க வேண்டும்.
இந்த அருங்காட்சியகம் மூலம் செயற்கை பவளப் பாறைகள் உருவாகவும், இதன் மூலம் மீன் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தகைய தனித்துவமான அருக்காட்சியங்களை இலங்கையின் பல்வேறு கடற்கரை பகுதிகளில் உருவாக்கி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் அந்நாட்டு அரசு தீர்மானித்து உள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட வட கடற்பகுதியில் தற்போது பழைய பேருந்துகளை கடலில் அடியில் இறக்கி அதன்மூலம் செயற்கை மீன் வாழிடங்களை உருவாக்கி மீன் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கச்சத்தீவு கடற்பகுதியில் பழைய பேருந்துகளை கடலில் இறக்குவதால் இவற்றில் தமிழக மீனவர்களின் வலைகள் சிக்கி சேதமடைவதுடன், படகுகள் மோதும் ஆபத்து உள்ளதாக ராமேசுவரம் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே கச்சத்தீவு கடலில் பழைய பேருந்துகளை இறக்கும் திட்டத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.