பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை வீழ்த்தி, நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) – மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர்.
களிமண் தரையின் ராஜா என வர்ணிக்கப்படும் நடால், பிரெஞ்ச் ஓபன் கிண்ணத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார் என வர்ணிக்கப்படுவதுண்டு. எனினும், நடாலின் ராச்சியத்தில் இறுதிப் போட்டிக்கே அவரை வர விடாமல் தடுத்துள்ளார் ஜோகோவிச்.
முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6வது முறை ஆகும். இதன்படி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை, நோவக் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.