இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் இந்தியாவின் முதல் சொந்த கொரோனா தடுப்பூசியாகும். ஐதராபாத்தின் பாரத் பயோ டெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இணைந்து இத்தடுப்பூசியை உருவாக்கியது. இத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் என்ற நிறுவனம் பாரத் பயோ டெக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம், அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதிக்கக் கோரி ஆக்குஜென் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை எப்.டி.ஏ., நிராகரித்து விட்டது. கூடுதல் தகவல்கள் மற்றும் டேட்டாக்களுடன் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுள்ளனர்.
இது பற்றி பேசிய ஆக்குஜென் நிறுவனத்தின் சி.இ.ஓ., டாக்டர் ஷங்கர் முசுனூரி, “உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க எப்.டி.ஏ., பரிந்துரைத்துள்ளது. இதனால் கூடுதல் பரிசோதனைகளை நடத்தி விண்ணப்பிப்போம். கோவாக்சினை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
ஆக்குஜென் நிறுவனம், கனடாவில் கோவாக்சினை விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமைகளையும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பெற்றுள்ளது. கனடா சுகாதாரத் துறையிடமும் ஒப்புதல் பெற பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில், வணிக ரீதியாக கோவாக்சின் பயன்பாட்டுக்கு வந்த ஒரு மாதத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 73 கோடி ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.