‘கோப்ரா’ படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வித்தியாசமான கெட்டப்புகளில் தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். ‘சேது’ படத்தில் ஆரம்பித்த இந்த முயற்சி தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. சேது படத்திற்கு பிறகு அவர் நடித்த பிதாமகன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட ஏராளமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ‘பீமா’ படத்தில் உடலை மெருகேற்றி கேங்ஸ்டராக தோன்றியிருந்தார்.
பின்னர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் தனது பிரம்மாண்டமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மூன்று வேடங்களில் நடித்திருந்த விக்ரம் நடிப்பில் உச்சம் தொட்டார் என்று கூறவேண்டும். மிருக மனித தோற்றம், உடல் எடையை ஏற்றி இறக்கியது நடித்தது என அனைவரின் பாராட்டையும் பெற்றார். தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கும் உடலை வருத்திக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இதையடுத்து ‘இருமுகன்’ படத்திலும் இரண்டு தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்நிலையில்
‘கோப்ரா’ படத்தில் விக்ரம் நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வித்தியாசமான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.