COVID-19 தொடர்பான சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
தற்போது சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தினசரி மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படுபவர்கள் தொடர்பான தரவுகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் வைத்தியர் சந்திக எபிடகடுவ இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்யும் போது,
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது.
ஜூன் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இலங்கையில் 36,333 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருப்பினும், ஜூன் 7 ஆம் திகதி இது 31,145 ஆக குறைந்தது. அதாவது 5,188 பேர் குறைந்தனர். சிகிச்சை பெறுபவர்களில் 5,000 க்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், ஜூன் 7 ஆம் திகதி 1,173 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேறியதாக தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மீதமுள்ள நோயாளிகளுக்கு என்ன ஆனது, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதே போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றன என்றார்.
5,000 முதல் 6,000 நோயாளிகள் அடிக்கடி பதிவுகளிலிருந்து காணாமல் போகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.