ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏற்றம் கண்டுள்ளார். விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் அதே இடத்தில் நீடிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசினார். அதேபோல் பேட்டிங்களில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனால், டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள புதுப் பட்டியலில் பந்துவீச்சாளர் தரவரிசையில் அஸ்வின் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 4ஆவது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் பென் ஸ்டோக்ஸ் இருந்த நிலையில் அவரை பின்னுக்குத்தள்ளி தற்போது ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா காயம் காரணமாக சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து 5ஆவது இடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தை ரிஷப் பந்த் தக்கவைத்துள்ளார். ரோஹத் ஷர்மா, நியூசிலாந்து வீரர் ஹென்ட்ரி நிகோலஸை பின்னுக்குத்தள்ளி 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்தடுத்து ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர்.