ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 1,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் ஆபத்தான அரியவகை பூஞ்சை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
மேலும், அதற்கு உரிய வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 1,955 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 1,301 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அம்மாநில மருத்துவ மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.