ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்.,19ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள், பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்தது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில், டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என முடிவு செய்த பிசிசிஐ, எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்.,19ம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இறுதி போட்டி அக்.,15ம் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, அனைத்து வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதற்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.