3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சீன அரசு அனுமதி அளித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கும், முதியோருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.
பின்னர் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 3 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனாவேக் தடுப்பூசி போட சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவேக் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டோங், “3 முதல் 17 வயது வரம்பிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போட சீன அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், எமர்ஜென்சிக்கு மட்டுமே தடுப்பூசி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனோவேக் தடுப்பூசியின் முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்துவிட்டன. இதில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சோதனை முடிவுகளில் சீனோவேக் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாக யின் வெய்டோங் தெரிவித்துள்ளார்.