வரலாற்றில் மிகப் பெரிய தேர்தல் மோசடியை நாம் கண்டுக் கொண்டு இருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் கடந்த சில வருடங்களாக எழுந்து வந்தன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 54 இடங்களில் வென்றது. எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 61 கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதில் நெதன்யாகுவுக்குச் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இஸ்ரேலில் அரபு கட்சி தலைமையில் 8 அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள உள்ளன. இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் பென்னெட் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் முறையாக நெதன்யாகு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி கூட்டத்தில் பேசும்போது, “ நாம் இந்த நாட்டின் வரலாற்றின் மிக பெரிய தேர்தல் மோசடியை கண்டுக்கொண்டு இருக்கிறோம். மக்கள் இதைக் கண்டு அமைதியாக இருக்க கூடாது” என்றார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை. எனினும் ஜூன் 14 -ம் தேதி நடைபெறலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.