கம்போடியாவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் 5 வருடங்கள் ஈடுபட்ட மகாவா என்ற ஆபிரிக்க வகை இராட்சத எலிக்கு பணியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால போரினால் பாதிக்கப்பட்டிருந்த கம்போடியாவில் புதைக்கப்பட்டுள்ள ஏராளம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் மகாவாவும் பங்களித்துள்ளது.
APOPO என்ற பெல்ஜிய இலாப நோக்கற்ற கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் பயிற்சியளிக்கப்பட்ட மகாவா, நிலக்கண்ணிகளை அடையாளம் காண்பதிலும், அது குறித்த எச்சரிக்கைகளை வழங்குவதிலும் வெற்றிகரமாக செயற்பட்டது.
மாகவா எலி மட்டுமே, 141,000 சதுர மீட்டருக்கும் (1.5 மில்லியன் சதுர அடி) அதிக பரப்பளவில் கண்ணிவெடியகற்றியுள்ளது. அதாவது, சுமார் 20 கால்பந்து மைதானங்களுக்கு சமமான நிலப்பரப்பில் மகாவா கண்ணிவெடியகற்றியுள்ளது.
இதுவரை, 71 கண்ணிவெடிகள் மற்றும் 38 வெடிக்காத வெடிபொருட்களை மகாவா அடையாளம் கண்டு, அகற்றியுள்ளதாக APOPO தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு துணிச்சலான விலங்குகளிற்கு பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமொன்றினால் வழங்கப்படும் விருதை மகாவா வென்றது. அதுவரை நாய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த விருதை, முதன்முறையாக எலி வென்றது.
“இன்னும் நல்ல உடல்நலத்துடன் இருந்தபோதிலும், மகாவா ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளது. இது ஓய்வுக்கான நேரம்.” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எலிகளின் ஆயுள்காலம் 8 ஆண்டுகள்.
மகாவா 2014 இல் தான்சானியாவில் பிறந்தது. 2016 ஆம் ஆண்டில், கம்போடியாவின் வடமேற்கு நகரமான புகழ்பெற்ற அங்கோருக்கு கொண்டு வரப்பட்டது.