வவுனியாவில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் இன்று (05) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பின்பற்றிய சுகாதார நடைமுறைகளின் குறைபாடுகளை சுட்டிக் காட்டியதுடன், அனுமதியின்றி வியாபாரத்தில ஈடுபட வேண்டாம் எனவும், வியாபாரத்தில் ஈடுபட முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெளிவு படுத்தி ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஐஸ்கிறீம் வியாபார நிலைய உரிமையாளரை அழைத்து தற்போதும் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபடுகின்றீர்களா என வினவியதுடன், குறித்த விற்பனை நிலையத்தின் பெயரில் அனுமதியின்றி வேறு நபர்களால் பயணத்தடை நேரத்தில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும், முறையான அனுமதியைப் பெற்றால் மாத்திரம் வியாபாரத்தில் ஈடபட முடியும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், பண்டாரிக்குளம் பகுதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்து அந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படும் மரகறிகளின் விலைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், சரியான கட்டுப்பாட்டு விலையை பேணுமாறும் அதனை மீறி விற்பனை செய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.