கள்ள காதலுக்கு இடையூறு என்று கருதி மூன்று வயது மகளை கொலை செய்து புதைத்த தாயை என்கவுண்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்த பெண் வரலட்சுமி. கணவனை பிரிந்து வாழும் வரலட்சுமி அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் தகாத தொடர்பு கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வயது மகள் மர்மமான முறையில் மரணமடைந்து புதைக்கப்பட்டார். சிறுமியின் மரணம் தொடர்பாக கிராம மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. வரலட்சுமி தன்னுடைய மகளை கொலை செய்திருக்கலாம் என்று கருதிய கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் கிராமத்திற்கு வந்து வரலட்சுமியிடம் விசாரணை நடத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை வழிமறித்து நின்ற பொதுமக்கள், கள்ளக்காதலுக்காக மகளை படுகொலை செய்து வரலட்சுமி உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும், இல்லையென்றால் எங்களிடம் விட்டு விடுங்கள்.நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக பொதுமக்களை சமாளித்த போலீசார் வரலட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.