கொரோனா பருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆகஸ்ட் 31-ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் விமான சேவை இயக்கப்படாததால், அதற்கு முன்பு விசா பெற்று இந்திய நாட்டுக்குள் வந்தவர்கள், இங்கேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற வெளிநாட்டினர் சந்திக்கும் சிக்கல்களை சரிசெய்ய வசதியாக, கடந்த 2020 ஜூன் 29ஆம் திகதி, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில், ஜூன் 30, 2020 க்குப் பிறகு காலாவதியாகும் அத்தகைய வெளிநாட்டினரின் இந்திய விசா அல்லது தங்குவதற்கான காலம் சாதாரண சர்வதேச விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிய நாளிலிருந்து கூடுதலாக 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், வெளிநாட்டினர் தங்களது விசா அல்லது தங்குவதற்கான காலத்தை மாதந்தோறும் நீட்டித்துக் கொள்ள விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் விசா அல்லது தங்குவதற்கான கால அனுமதியை 2021 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக வெளிநாட்டினர் எந்த விண்ணப்பத்தையும் அனுப்ப வேண்டியதில்லை என்றும், வெளிநாட்டுக்குத் திரும்பும் போது எந்த கட்டணமோ, அபராதமோ செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.