கசிப்பு விற்பனையையும் அத்தியாவசிய சேவையாக கருதி, நடமாடும் கசிப்பு வியாபாரம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரணவாய் கிராமத்தில் நேற்று (4) நடந்தது.
நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அததியாவசிய பொருள் விநியோகத்திற்காக நடமாடும் சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியில் வாகனத்தில் நடமாடும் கசிப்பு வியாபாரம் நடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், திடீர் சோதனை நடத்தினர்.
நடமாடும் மரக்கறி வியாபாரம் என்ற போர்வையில் கசிப்பு வியாபாரம் நடக்கும் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
கோப்பாயிலிருந்து வடி வாகனமொன்றில் மரக்கறிகளை ஏற்றியபடி வரும் குழுவொன்று, அதற்குள் கசிப்பையும் சூட்சுமமாக மறைத்து எடுத்து வந்தது.
நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்பட்டு வருகிறது. இதனால் திண்டாடி வரும் சாதாரண குடிமக்களிற்கு நடமாடும் கசிப்பு வியாபாரத்தையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.
வாகனத்திற்குள்ளிருந்து 20 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது.
வாகனத்திலிருநத 4 பேர் கைது செய்யப்பட்டனர்.