பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் இன்று இரவு முதல் ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளார்.
ட்ரைலரில் சமந்தா இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணாகக் காண்பிக்கப்பட்டிருந்தார். இந்த சீரிஸில் தமிழர்களைத் தீவிவாதிகளாக சித்தரித்துள்ளதாகப் பல புகார்கள் எழுந்தன. எனவே இந்த வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சீரிஸை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர்.
ஆனால் சீரிஸின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே தங்களுக்கு தமிழர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், தமிழர்களைத் தவறாக சித்தரிக்கவில்லை என்றும் கூறி சர்ச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சமந்தா இதுவரை மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இரவு பேமிலி வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரின் எதிர்ப்பையும் மீறி சீரிஸ் வெளியாக உள்ளது. சீரிஸ் வெளியான பிறகே அதில் தமிழர்களை எப்படி அடையாளப்படுத்தியுள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.