கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று, மருத்துவர்கள் என கூறி பெரும் தொகை பணம் அறவிட்டு சிகிச்சை அளித்த இருவர் நேற்று (02) கெஸ்பேவ பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவர் என கூறுபவரையும், உதவியாளரையுமே பொலிசார் கைது செய்தனர்.
மருத்துவர்களின் சின்னம பொறிக்கப்பட்ட வாகனம், மருத்துவ பொருட்களையும் பொலிசார் கைப்பற்றினர்.
கஹபொல பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த நோயாளிகளுக்கு வீடுகளிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
குழு ஒன்று இருப்பதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின அடிப்படையில் மருத்துவர் என கூறும் ஒருவரின் தொலைபேசி இலக்கம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கஹபொல பகுதியை சேர்ந்த ஒருவரிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டுமென்றும் அந்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்கப்பட்டது.
நோயாளியின் நிலைமையை பொறுத்து 11,000 ரூபா முதல் 13,000 ரூபா வரை கட்டணம் வசூலிப்பதாக மருத்துவர் என கூறுபவரால் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகள் தரப்பு அதற்கு சம்மதித்தது.
இதையடுத்து அந்த வீட்டிற்குள் பொலிசார் மறைந்திருந்தனர். இளைஞன் ஒருவர் நோயாளியை போல படுத்த்திருந்தார். அவரது சகோதரன் என கூறி இன்னொருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
நோயாளிக்கு சிகிச்சையளிக்க தயாரான போது, வீட்டுக்குள் மறைந்திருந்த பொலிசாரால் இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இப்படி பலருக்கு சிகிச்சையளித்து பெருமளவான பணமீட்டியதாக தெரிவித்தனர்.
கைதான ஒருவர், வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றதாக கூறினார். எனினும், கைதான சமயத்தில் அதற்கான ஆவணங்கள் அவரிடமிருக்கவில்லை. மற்றையவர் ஆடைத் தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்.