உலகில் 4000 த்திற்கும் அதிகமான அளவில் உருளைக்கிழங்கு வகைகள் உள்ளன. இனிப்பு உருளைக்கிழங்கு, நீல உருளைக்கிழங்கு, ஜப்பானிய ஊதா உருளைக்கிழங்கு மற்றும் சிவப்பு தோல் உருளைக்கிழங்கு என பல வண்ணங்களில் உருளைக்கிழங்குகள் உள்ளன. இருப்பினும் பச்சை நிற உருளைக்கிழங்குகள் உண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பச்சை நிற உருளைக்கிழங்குகள் என குறிப்பிடப்படும் உருளைக்கிழங்குகள் முழுவதும் பச்சையாக இருப்பதில்லை. நாம் உண்ணும் சாதரண வகை உருளைக்கிழங்குகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். அப்படி நீங்கள் வாங்கும் உருளைக்கிழங்கில் பச்சை நிறமாக இருப்பின் கத்தியை பயன்படுத்தி பச்சை நிற பாகங்களை மட்டும் வெட்டி விடுங்கள்.
ஒரு உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் உள்ளது எனில் அது சோலனைன் எனப்படும் நச்சு கலவையால் பாதிக்கப்பட்டுள்ளது என பொருளாகும். எனவே பச்சை முளைகள் கொண்ட உருளைக்கிழங்கை அல்லது பச்சை கறை உள்ள உருளையை பார்க்கிறீர்கள் எனில் அது சோலனைனால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
பச்சை நிறமி
தொழில்நுட்ப ரீதியாக உருளைக்கிழங்கில் அந்த பச்சை நிறத்தை குளோரோபில் கொடுக்கிறது. இந்த நிறமியானது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும் அதை வெட்டி எறிவதே நல்லது. ஏனெனில் இந்த உருளை கிழங்கு சூரிய வெளிச்சத்திற்கு கொண்டு வரும்போது இதில் அதிக அளவு சோலனைன் உற்பத்தி ஆக கூடும்.
விளைவு
சோலனைன் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை நீங்கள் உட்கொண்டால் அது குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதையே அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது காய்ச்சல், மெதுவான சுவாசம் மற்றும் வயிற்றில் வலி ஆகியவை ஏற்படுகின்றன.
நச்சுத்தன்மை
அனைத்து உருளைக்கிழங்கிலும் இந்த நச்சானது இயற்கையாகவே காணப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த நச்சின் அளவானது உருளைக்கிழங்கில் 0.1 சதவீதத்தை தாண்டும்போது அதனால் கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் நீங்கள் ஒரு பச்சை உருளைக்கிழங்கை உண்ண நினைத்தாலும் அதை பிடிக்காமல் வெளியே துப்புவதற்கு வாய்ப்புள்ளது.
ஏனெனில் சோலனைன் விரும்பதகாத முறையில் கசப்பு சுவையை கொண்டுள்ளது. எனவே பச்சை நிறம் ஏறிய உருளைக்கிழங்குகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கிவிட்டு உண்பது நல்லது.