மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான மருதநகரில் இன்று 124 பேருக்கும், நேற்று 150 பேருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பெறுபேறுகளின் முடிவின்படியே முடக்கல் நிலையில் இருந்து மேற்படி கிராமத்தினை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் தெரிவித்தார்.
மேற்படி கிராமத்தில் அண்மையில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் தொடர்புபட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் அப் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலை,மாலை வேளைகளில் கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஒலி பெருக்கி மூலம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பரிசோதனையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.ஜசோதரன் ,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி அடிக்கடி பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்




